போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

போர்க்குற்றங்களை மூடிமறைக்கமுடியாது! – சபையில் சம்பந்தன் எடுத்துரைப்பு

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. எனவே, அதை நிறைவேற்றும் கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் இனியும் தொடரக்கூடாது.”

– இவ்வாறு நாடாளுமன்றில் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் அரசின் (மஹிந்த அரசின்) செயற்பாடுகள் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை. உள்ளகப் பொறிமுறையும் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இதன்காரணமாகவே 2015இலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசுக்கு தற்போது காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தீர்மானத்துக்குக் கட்டுப்பட்டு அதை அமுல்படுத்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதை எவ்வாறு உரிய வகையில் நிறைவேற்றுவது என்பது பற்றிச் சிந்தித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது என்று பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது முற்றிலும் தவறானதாகும். இந்தக் கருத்துடன் உடன்பட முடியாது. போரின்போது இருதரப்புமே அனைத்துலக சட்ட திட்டங்களை மீறியுள்ளன. அது பற்றி விசாரிக்கவேண்டுமென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டறிக்கையொன்றை விடுத்தார். இதன்பிரகாரமே அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன. பொறுப்புக்கூறல் பற்றியும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

நாட்டின் தென்பகுதிகளில் சிங்கள இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆயிரக்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் இடம்பெற்றபோது 1980களின் இறுதிக் காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அங்கத்தின் தலையீட்டைக் கோரி மஹிந்த ராஜபக்ஷ ஜெனிவா சென்றிருந்தார். தாம் என்ன செய்கிறோம் என்பதை தெரிந்தே அவர் அதைச் செய்திருந்தார்.

எனினும், 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதற்கான ஒரே வித்தியாசம் அதைப் போன்ற சம்பவங்கள் வடக்கில் இடம்பெற்றிருந்தன என்பதுதான். எவரும் இராணுவ வீரர்கள் சார்பில் முறையிட்டிருக்கவில்லை.

1988 மற்றும் 1989 களில் மஹிந்த ராஜபக்ஷ ஜெனிவா சென்றிருந்தபோது இராணுவ வீரர்கள் சார்பில் அவர் முறையிட்டிருக்கவில்லை. பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே அவர் முறையிட்டிருந்தார். பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலேயே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் செயற்படுகிறது.

அதற்குச் சமாந்தரமாக ஆயுதப் படையினர் இழைத்த மீறல்களுக்காக அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் பொதுமக்கள் பற்றிய கரிசணை கொண்டுள்ளன.

ஆகவே, தண்டனையில் இருந்து தப்பும் இந்தக் கலாசாரம் நீடிக்கக்கூடாது. அது முடிவுக்கு வர வேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களில் நிராயுதபாணியான பொதுமக்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்த ஆயுத போராளிகளுக்கு எதிராக அரசினால் எடுக்கப்பட்ட முறையான நடவடிக்கைகளுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது. இந்த இரு நிலைமைகளுக்கும் இடையிலான வித்தியாசம் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்த விவாதத்தின் ஆரம்பத்தில் யுத்த வீரர்கள் பற்றி பேசப்பட்டது. எனினும், அனைத்து யுத்த வீரர்களும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறி செயற்பட்டனர் என்று நான் கருதவில்லை. எனினும், அவர்களில் சிலர் சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டங்களுக்கு எதிராக குற்றங்களை இழைத்துள்ளனர்.

ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் என்னெலிகொட தொடர்பான வழக்குகள் மற்றும் திருகோணமலை 5 மாணவர்கள் மற்றும் மூதூரில் 17 தொண்டர் பணியாளர்கள் படுகொலைகள் போன்ற விடயங்களில் ஆயுதப் படையினர் அல்லது யுத்த வீரர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்பதை மூடிமறைக்க முடியுமா? இந்தச் சம்பவங்களில் யுத்த வீரர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றை மூடிமறைக்க முடியாது.

மனித குலத்துக்கு எதிராக 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இழைக்கப்பட்ட குற்றங்களை எப்படி மூடி மறைக்க முடியும்?

உயர் பதவிகளை வகிக்கும் நபர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் பெருக்கிக் கொள்வதில் முறையான கடமையை நிறைவேற்றுவதில் அரசொன்றுக்கு இருக்கும் பொறுப்பையும் நிராயுதபாணியான பொதுக்கள் கொலைகளையும் யாரும் குழப்பிக்கொள்ள இடமளிக்கக்கூடாது.

1988 மற்றும் 1989களில் தெற்கில் இடம்பெற்ற சம்பவங்களும் சரி, 2008 மற்றும் 2009களில் வடக்கிலும் இடம்பெற்ற சம்பவங்களும் சரி மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகும். எந்தவொரு நாடும் அவ்வாறான குற்றங்களை அலட்சியம் செய்யாது.

எமது நாடு பேரழிவுமிக்க நிலைமைகளை சந்தித்துள்ளது. நாம் அந்த நிலைமையில் இருந்து மீள வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முழுமையானதும் துரிமானதூமான அமுலாக்கம் அந்தப் பாதை நோக்கிய முதலவாது படியாக இருக்கும். இந்த நடவடிக்கையில் இடம்பெறக்கூடிய தாமதமோ அல்லது மறுப்போ எமது நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதிப்பாகவே அமையும்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *