முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இறுதி யுத்த அழிவுகளை பறைசாற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் துக்க தினத்தன்று, விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி அதனை கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாமென கோரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவியான எஸ்.புஸ்பாம்பாள் கூறுகையில், பல இழப்புகளை சந்தித்த அந்த நாளில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரிய விடயமென தெரிவித்தார்.

அத்தோடு, இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சகல கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்ட ஒரு நாளில் உதைப்பந்தாட்ட போட்டியை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதென மனித உரிமை செயற்பாட்டாளர் சின்னையா லோகேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட வேண்டுமே தவிர அதனை கேளிக்கையாக்கிவிடக் கூடாதென தெரிவித்த அவர், முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றவர்களுக்கும் ஆயுதப் போராட்டத்தில் பங்களிப்பு செய்தவர்களுக்குமே அந்நாள் எவ்வளவு வலி மிகுந்ததென தெரியுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *