மஹிந்த ஆட்சியாளர்கள் போன்று சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியில் இல்லை: முஜிபுர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்களை போன்று, சர்வதேசத்திடம் மண்டியிடும் கொள்கை நல்லாட்சியிடம் இல்லை என கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தூதரகங்களுக்கான சிறப்புரிமை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று வடக்கு- தெற்கு பிரச்சினையை தீர்ப்போம் என்றும், அதற்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடந்த ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராகவிருந்த ஜி.எல்.பீரிஸ் மண்டியிட்டிருந்தார்.

ஆட்சியில் இருக்கும்போது மன்மோகன் சிங்கிடம் மண்டியிட்டவர்கள், தற்போது ஆட்சியை இழந்த நிலையில், எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக சண்டியர்கள் போன்று பேசுகின்றனர்.

அவர்கள் மன்மோகன் சிங்கிடம் ஒன்றையும், தெற்கு சிங்கள மக்களிடம் ஒன்றையும், இந்த உயரிய சபையில் வேறொன்றையும் பேசும் தந்திரம் கொண்டவர். ஆனால் இவர்களை போன்று யாரிடமும் மண்டியிடும் கொள்கை எம்மிடமில்லை. நாம் ஒரு வெளியுறவுக் கொள்கையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த ஆட்சியாளர்களை போன்று இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சர்வதேச நாடுகளை பொருட்படுத்தாது அவர்களை புறந்தள்ளிட்டு தனியாக எம்மால் பயணிக்க முடியாது. அனைவருடன் சுமூகமான முறையில் செயற்பட்டாலேயே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்” என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *