காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது கோரிக்கைக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது அண்ணாவை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து தருமாறு சகோதரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியிலும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுவரும் போராட்டம் இன்று 64 ஆவது நாளை எட்டியுள்ளது.

காலம் கடந்துள்ள போதும் தமது கோரிக்கைக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை என்று கவலை வெளியிட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,

தமது கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 27 ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவற்றுடன் கூடியதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தேடிய சங்கத்தின் சுழற்சி முறையிலான போராட்டம் திருகோணமலையிலும் இடம்பெற்றுவருகின்றது.

குறித்த போராட்டம் எதுவித தீர்வுமின்றி 51 ஆவது நாளாக இன்று இடம்பெறுகின்றது.

போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நாட்கள் நகர்ந்துள்ள போதம் எதுவித தீர்வும் வழங்கப்படாததைக் கண்டித்து, 50 ஆவது நாளான நேற்று கவனயீர்ப்பு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் உள்ள சுற்று வட்டத்திற்கு சென்று மீண்டும் ஆளுனர் அலுவலத்தை சென்றடைந்தது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தமக்கான சிறந்த தீர்வுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலையில், சர்வதேசமாவது தமது பிரச்சனைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *