நில மீட்புப் போராட்ட மன்னார் மக்களுக்கு சர்வமதத் தலைவர்கள் ஆதரவு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மன்னாரில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பிற்கு மன்னார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையும் தேசிய உலமா சபையின் தலைவர்களும் தலைமை தாங்கியுள்ளனர்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வில்பத்து சரணாலயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி மன்னார் மறிச்சுக்கட்டி கிராம மக்கள் 16 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு இன்று நேரடியாக விஜயம் செய்த சர்வமத தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ள மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரியப்படுத்தினர்.

மண் மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மறிச்சுக்கட்டி உட்பட அனைத்து மக்களினதும் சொந்த நிலங்கள் விடுவிக்கப்படும் வரை மண் மீட்புப் போராட்டம் தொடரும் என்றும் அவற்றுக்கு தமது ஆதரவு இருக்கும் என்று மன்னார் – திருமலை மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.

இதனையடுத்து சர்வமதத் தலைவர்கள் மறிச்சுக்கட்டியில் இருந்து முள்ளிக்குளம் கடற்படைத் தளத்திற்கு முன்னால் 20 ஆவது நாளாக தொடர் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையினரால் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நிலையில் அன்று முதல் இன்று வரை அங்கு வாழ்ந்த 350 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமது காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேறுமாறு வலியுறுத்தி தொடர் போராடடத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை சர்வமதத் தலைவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *