காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கும் சட்டமூலம் அனைத்து பிரஜைளுக்குமான மனித உரிமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

காணாமல் போவதைத் தடுப்பது தொடர்பான சட்டமூலத்திற்கு அரசியல் ரீதியில் இரட்டைக் கொள்கையை கடைப்பிடிக்கும் தரப்பு எதிர்ப்புத் தெரிவிப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சட்டமூலம் நியாயமான சுதந்திரமான ஒழுக்கமுள்ள சமூகத்தில் அனைத்து பிரஜைகளுக்கும் உரிய ஒரு மனித உரிமையாகும்.
இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கம் இலங்கையில் பிறந்து வாழும் அனைவரும் பலவந்தமான கடத்தலுக்கோ , காணாமல் ஆக்கப்படும் செயற்பாட்டிற்கோ, முறையற்ற சிறை வைப்பிற்கோ உள்ளாகாமல் வாழ்வதற்கான சுதந்திரத்தை உருவாக்குவதாகும்.
இவ்வாறான சட்டமூலத்தின் ஊடாக வெள்ளை வான் கலாசாரத்திற்கும் அரச அனுசரணையுடன் எதிராளிகளை கடத்தும் முயற்சிகளுக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.
இது குறித்து நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் மகிழ்ச்சியடைய வேண்டும். எனினும், அன்று வெள்ளைவான் கலாசாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்திய அரசியல் பூதங்கள் வழமை போன்று இந்த நாட்டில் மக்களை வழிகெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதிகார மோகத்துடன் இவ்வாறான போலிப் பிரசாரங்களை சமூகமயமாக்கும் முயற்சிகளை கண்டிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டமூலம் எதிர்காலத்தில் மாத்திரம் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு சட்டமூலமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் இந்த சட்டமூலத்தினால் உள்ளீர்க்கப்படமாட்டாது.

வெள்ளை வான் கலாசாரத்தை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பது மனித நேயத்தை மதிக்கும் எவருக்காவது பிரச்சினையா? என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் எதிர்காலத்திலும் கூட இளம் உயிர்களை பழிவாங்குவதற்கும் அழித்தொழிப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென விரும்புகின்றார்களா என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டுமன்றி இந்த சட்டமூலம் காரணமாக படை வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுமென ராஜபக்ஷ தரப்பினர் ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஆட்கடத்தல், படுகொலை, காணாமல் போனமை போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் நாட்டின் பாதுகாப்புப் படையினர் பொறுப்புக் கூற வேண்டும் என அவர்கள் உலகத்திற்கு பறைசாற்ற விரும்புகின்றார்களா என அமைச்சர் சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் படைவீரர்களை யுத்தக்குற்றவாளிகளாக மாற்றுவதற்கு அவர்கள் முயற்சிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அவரின் இரட்டை முகத்தை மீண்டும் நாட்டிற்கு வெளிப்படுத்தி வருகின்றார். பலவந்தமாக அல்லது அலட்சியம் காரணமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி கோரி இந்த விடயம் தொடர்பில் முதல் தடவையாக எமது நாட்டின் மீது கவனம் செலுத்துவதற்கு காரணமாக இருந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.

அன்று மனிதாபிமானமாக செயற்பட்ட ராஜபக்ஷ இன்று தன்னுடைய கடந்த காலத்தை மறந்து செயற்படுவது புதுமையாக உள்ளது என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

 

2015ம் ஆண்டு டிசம்பர் 10ம் திகதி பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. 2016ம் ஆண்டு மே 25ம் திகதி இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

இலங்கைக்குள் இந்த சாசனத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்குவதற்கான சட்டமூலத்தை 2017 மே மாதம் 9ம் திகதி வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்ற அனுமதிக்காக அதனைச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டமூலம் கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. எனினும், அன்றைய தினம் இலஞ்ச ஊழல் சட்டமூலம் தொடர்பான விவாதம் இடம்பெற்றதால் காணாமல் ஆக்கப்படுவதை தவிர்க்கும் சட்டமூலம் தொடர்பான விடயத்தை எதிர்வரும் தினமொன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *