சர்வகட்சிப் பேரவையை அமைக்கிறார் மைத்திரி!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
புதிய அரசமைப்புத் தொடர்பில் பெளத்த மகா நாயக்க தேரர்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து சர்வகட்சிப் பேரவை ஒன்றைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசமைப்புப் பேரவையாக மாறியுள்ள நாடாளுமன்றத்தில் உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு வரைவுத் திட்டத்திற்குச் சர்வகட்சிப் பேரவையின் ஊடாக அனுமதி பெற்றுக் கொள்ள ஜனாதிபதி  திட்டமிட்டுள்ளார் என்றும் – அரசமைப்பு யோசனைகள் தயாரிக்கப்பட்டதும் சர்வ கட்சிப் பேரவை கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது.
நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளைப் போன்றே, நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவம் செய்யாத அரசியல் கட்சிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் போன்ற தரப்புகளுக்கு சர்வகட்சிப் பேரவையில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
சர்வகட்சிப் பேரவையில்  புதிய அரசமைப்பு அறிவிக்கப்பட்டதும் அந்தப் பரிந்துரைகள் மூன்று பீடங்களினதும் பீடாதிபதிகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களிடம் முன் வைக்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டது.
அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி அதன் அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர்  சம்பந்தனுடன் ஆரம்பகட்டப் பேச்சுகளை நடத்தியுள்ளார் எனக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன. ஆனால், தாம் ஜனாதிபதியுடன் அத்தகைய உரையாடல் எதிலும் ஈடுபடவேயில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *