பொன்சேகா விவகாரம்: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியான பொது எதிரணி கொண்டுவந்தால் அதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதியும் பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராகவும் செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் கடந்த வாரம் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களிலும், மனிதப் படுகொலைகளிலும் ஈடுபட்டமைக்கு தன்னிடம் ஆதாரங்கள் உள்ளன என்று இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் சரத் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க மஹிந்த அணி களத்தில் குதித்துள்ளது.

இதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மஹிந்த அணி தயாராகிவருகின்றது.

இந்நிலையில், அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களிக்கும் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எவ்வித தயக்கமுமின்றி நீதிமன்றில் ஆஜராகி உண்மையை வெளிப்படுத்தவேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை சரத் பொன்சேகாவின் கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊக்குவிக்கும் எனவும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *