குப்பையைக் கிளறாதீர்! – பொன்சேகா மீது சம்பிக்க பாய்ச்சல்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்துவிடக்கூடாது.”
– இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப்புலிகள் அமைப்பின் நெடியவன், அடேல் பாலசிங்கம், விநாயகம் ஆகியோரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையா?தனிப்பட்ட ரீதியில் குப்பைகளை பொன்சேகா கிளறக்கூடாது.
இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை விசாரிக்க பொன்சேகா கோருவாராயின் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைதுசெய்ய வேண்டும்.  நாங்கள் அந்த இருண்ட யுகத்துக்குச் செல்ல வேண்டுமா?
எனவே, பொன்சேகா தனது நற்பெயரைக் கெடுத்து அடுத்தவர்கள் மீது விரல் நீட்டக்கூடாது. மீதி நான்கு விரல்களும் தன்னை நோக்கியே திரும்பி உள்ளன என்பதை அவர் மறந்துவிடக் கூடாது.
இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கப் போவதில்லை” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *