அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?”
– இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ரெலோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம் வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைக்காக பா.டெனீஸ்வரனை ரெலோவிலிருந்து ஆறு மாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அந்தக் கட்சி அறிவித்திருந்தது.
இது தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ரெலோவுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் நான் போட்டியிட்டேன்.தேர்தலின் பின்னர் அன்றிலிருந்து இன்றுவரை தங்களுடைய கட்சிக்கு விசுவாசமாகவும் அடிப்படைத் தொண்டன் என்ற வகையிலும் செயற்பட்டு வருகின்றேன். கட்சியும் கட்சியின் செயலாளர் நாயகமும் பல தடவைகள் ரெலோவின் கூட்டங்களுக்கு வருவதில்லை என்றும் ஏறக்குறைய 21 கூட்டங்களில் ஒரு கூட்டத்துக்கே வந்துள்ளதாகவும் வெளிப்படையாகவே குற்றம்சுமத்தி வருகின்றனர்.
என்னை எப்போதே
நீக்கியிருக்கலாம்
 
கூட்டத்துக்கு வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மாகாண சபை உறுப்பினர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே மன்னார் மாவட்டத்தில் கூட்டம் ஒழுங்குசெய்து நடாத்தப்பட்ட கூட்டமே எனக்கும் ரெலோ கட்சிக்குமிடையில் நடைபெற்ற முதலாவது கூட்டமாகும். அந்தக் கூட்டத்தில் பல ஏற்றுக்கொள்ளமுடியாத காரணங்களை முன்வைத்தபோது அதற்கு எதிராக தனியொருமனிதனாக குரல் கொடுத்திருந்தேன். அதற்குப் பின்னர் நடைபெற்ற 20 கூட்டங்களுக்கும் நான் சமூகமளிக்கவில்லை என்பது உண்மைதான்.
ஏன் வரவில்லை என்ற காரணம் எனக்கும் கட்சிக்கும் தெரிந்தவிடயம். மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று நினைத்தால் அதனைச் செய்வதற்கும் தயாராகவே உள்ளேன். நான் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமை பெற்றவராக இருப்பின் தங்களுடைய கட்சியின் விதிகள் சரியாக இருக்குமெனில் மூன்று கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வராமல் இருக்கும்போதே அத்தகைய உறுப்பினர் தனது அடிப்படை உறுப்புரிமையை இழக்கநேரிடும்.
சட்ட மற்றும் யாப்பு விதிகளில் இது பொதுவாக காணப்படும் ஒரு ஏற்பாடாகும். அவ்வாறெனில் தொடர்ச்சியாக 20 கூட்டங்களுக்கு சமுகமளிக்கமால் இருந்த ஒரு உறுப்பினரை தாங்கள் ஏன் எதற்காக கட்சியிலிருந்து நீக்காமல் விட்டீர்கள்?
 
புறமுதுகில்
குத்தவேண்டாம்
கட்சியானது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோடு சேர்ந்து சூட்சுமமாக எனது அமைச்சுப் பொறுப்பை பறித்து பழிவேண்ட வேண்டுமென்ற நோக்கில் செயற்படுவதனை என்னால் உணரமுடிகின்றது. எனக்குத் தெரியாமல் இரகசியமாக என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு முதலமைச்சருக்கு கடிதம் எழுதாமல் என்னோடு நேரடியாக கதைத்திருந்தால் எந்தவித தயக்கமுமின்றி அமைச்சுப் பதவியைத் தங்களுக்கு விட்டுத்தந்திருப்பேன்.
தற்பொழுது ரெலோவும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் புறமுதுகு குத்தி என்னை பழிவேண்ட வேண்டுமென்று நடவடிக்கைகள் மேற்கொள்வீர்களாயின் தகுந்த நேரத்தில் எமது மக்கள் தங்களுக்கு தகுந்தபாடம் புகட்டுவார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம்.
 
நிரந்தரமாக
நீக்குங்கள்
கட்சியானது ஜனநாயக ரீதியாக வளர்ந்து வருகின்றபோது வெளிப்படை தன்மையோடும், நேர்மையுடனும் செயற்பட்டாலாலேயே அந்தக் கட்சியானது மக்களின் மனங்களில் இடம்பிடிக்க முடியும். இது தவிர்த்து சிறுபிள்ளைத்தனமாகக் கட்சி நடந்து கொள்ளுமாயின் அந்தக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்பதனையும் மறந்துவிட வேண்டாம்.
எது எவ்வாறு இருப்பினும் சட்ட மற்றும் யாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக முறைப்படி என்னைக் கட்சியில் ஒரு உறுப்பினராகச் சேர்த்துவிட்டு, அதன்பின்னர் தங்களது யாப்பில் பின்னோக்கியாளும் சட்ட ஏற்பாடுகள் காணப்படுமிடத்து, ஆறு மாதங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துவதனை விட நிரந்தரமாகவே தங்கள் கட்சியில் இருந்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *