யாழ். மருதங்கேணி கடல்நீர் ஊடாக நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ். மாவட்டத்தின் நீர்தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கு இரணைமடு நீர் வராது எனக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? என சம காலத்தில் கேள்விகள் எழுந்துவரும் நிலையில், இது தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர் திட்டம் வட மாகாணசபை அமைவதற்கு முன்பதாகவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்ட அவர்,

வட மாகாணசபை அமைந்த பின்னர், இரணைமடு குளத்தை நம்பியிருக்கும் விவசாயிகளுடன் பேசப்பட்டதாகவும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து அறிக்கையும் பெறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் 3 பிரிவுகளாக இரணைமடு கிளிநொச்சி மக்களுக்கும், மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் யாழ்ப்பாண மக்களுக்கும், பிறிதொரு திட்டமாக யாழ். கழிவு நீர் வடிகால்களை சீரமைக்கும் திட்டமுமாக பிரிக்கப்பட்டது.

இதில் மாற்றங்கள் எவையும் இல்லை. வடமாகாணம் குறிப்பாக யாழ். மாவட்டம் குடிநீருக்கு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையை நாங்கள் நன்றாக அறிகிறோம். அதேசமயம் முன்னர் கிணறுகள் இருந்த காலத்தில் இவ்வாறான நிலையிருக்கவில்லை.

தற்சமயம் கிணறுகளும் மாசடைந்திருக்கும் நிலையில், குடிநீருக்கு பலத்த நெருக்கடி எழுந்துள்ளது. இந்த நிலையில் நீரை வெளியில் இருந்து கொண்டுவர வேண்டிய நிலை எழுந்துள்ளது.

எனவே திட்டமிட்படி யாழ். மாவட்டத்தின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கு யாழ். மருதங்கேணியில் அமைக்கப்படும், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பயன்படுத்தப்படும்.

அதேவேளை இரணைமடுக்குளம் புனரமைக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அதேவேளை யாழ். கழிவு நீர் வடிகாலமைப்பு திருத்தம் செய்வதற்கான பொறுப்பை பிரெஞ்சு அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.

ஆனால், பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் அதில் இருந்து பின்வாங்கியிருக்கின்றது. ஆனால், அந்த திட்டத்திற்கான நிதியை வேறு முதலீட்டாளர்கள் ஊடாக பெற்று கொடுப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பட்டுள்ளது.

மேலும் தற்சமயம் ஆறுமுகம் திட்டம் தொடர்பாகவும் பேசப்படுகின்றது. அதுதொடர்பாக ஆய்வுகள் நடக்கின்றன.

ஆனால், யாழ்ப்பாணம் இரணைமடு குடிநீர் திட்டம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
எனவே, யாழ்ப்பாணத்திற்கு எங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள் என முரண்பட்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *