மட்டக்களப்பில் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்கான பயிற்சி: ஸ்ரீபத்மநாதன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு உற்பத்தித் தொழிற்துறைக்காக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறிகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏதாவதொரு உற்பத்தித்துறையில் தமக்கு பயிற்சிகள் தேவை என்ற வேண்டுகோள் சுயதொழில் உற்பத்தித் தொழில்துறையில் ஆர்வம் காட்டுவோரால் கூட்டாக முன்வைக்கப்படுமாயின் அவர்கள் தெரிவு செய்யும் தொழில் துறைகளுக்கான பயிற்சிகள் இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்புப் பிரிவினால் இலவசமாகவே வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இது ஒரு அரிய வாய்ப்பு, இதனை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர் யுவதிகளும் உற்பத்தித்துறை சார்ந்தோரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உள்ளுரில் தாராளமாக மூலப் பொருள் கிடைக்கின்றபோதும் அதுபற்றிய அக்கறையில்லாது நாம் பொதுவாக வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களின் நுகர்வோராக இருப்பதால் எமது பொருளாதாரமும் வளமும் வீணடிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பால் கிடைக்கின்ற போதிலும் வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாலுணவுகளின் நுகர்வோராக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உள்ளார்கள்.

அதேபோன்று ஏனைய அரிசி மாப்பொருள் உற்பத்திகள், உப உணவு உற்பத்திப் பொருட்கள், மாசி, கடலுணவு மற்றும் சவர்க்காரம் உட்பட அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பாவனைக்கான பொருட்களின் அநேகமான மூல வளங்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கின் அநேக பகுதிகளில் கிடைக்கின்றன” என ஆர். ஸ்ரீபத்மநாதன் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *