கருணாவின் மாற்று தமிழ் சக்தி கனவு பலிக்காது: முபீன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தனியொரு மாற்று தமிழ் சக்தியாக உருவாகுவதற்கு முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் முயற்சிப்பது, நிறைவேறாத பகற்கனவாகுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் இணைந்துகொள்ள வேண்டுமென, அண்மையில் கருணா அம்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முபீன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மையினர் ஒற்றுமைப்படுதலின் ஊடாகவே, அவர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்ற கருத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற வேளையில் கருணாவின் இந்தக் கூற்றில் பல்வேறு சதித் திட்டம் கொண்ட பின்னணிகள் இருப்பதை சந்தேகிக்க வேண்டியுள்ளதென முபீன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான இணைந்த வேலைத்திட்டத்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அதில் அரசியல் யாப்புத் திருத்தம், அதிகாரப் பகிர்வு, தேர்தல் முறை மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் மேற்படி தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்படுகின்றன. இந்நிலையில், இதனை சீர்குலைத்து சிறுபான்மையினர் தமக்கான உரிமைகளைப் பெறுவதிலிருந்து தடுப்பதற்கான முயற்சியாகவே கருணாவின் கூற்று அமைந்துள்ளதென முபீன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதன் பின்னணியில் காணப்படும் விடயங்களை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டுமென முபீன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *