மைத்திரி, ரணிலுடன் அடுத்த வாரம் கேப்பாப்பிலவு மக்கள் நேரில் பேச்சு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
கேப்பாப்பிலவில் மண்மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடுத்த வாரம் நேரில் சந்தித்து நீதி கோரப்போகின்றார்கள்.
இந்தச் சந்திப்புக்கான முயற்சிகளைத் தான் மேற்கொண்டுள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் 136 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி அவர்களின் போராட்டம் தொடர்கின்றது.  தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என அவர்கள் அறிவித்துள்ளனர்.
“போராட்டம் முடிவின்றி நீண்டுசெல்கின்ற நிலையில், நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து நீதி கோரப்போகின்றோம்” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேப்பாப்பிலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் தொடர்பாகக் கேட்டபோதே அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க வைப்பதற்கான முயற்சி தொடர்பாகக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதற்காக நாம்   முழுமையான முயற்சிகளில் ஈடுபடவுள்ளோம். கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் அரசுடன் நாம் பலமுறை பேசியிருக்கின்றோம். நாடாளுமன்றத்திலும் ஒத்திவைப்புவேளை பிரேரணை கொண்டுவந்து பேசினோம். எனினும். இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அடுத்த வாரம் இந்த மக்களின் பிரதிநிதிகளை அழைத்துச்சென்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *