செஞ்சோலை தளிர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பதினொன்று!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யுத்தத்தால் தமது உறவுகளை பறிகொடுத்து, பாசத்திற்காய் ஏங்கித் தவித்து, எதிர்காலம் பற்றி சிந்திக்கவே தெரியாத பருவத்தில் வாழ்ந்த செஞ்சோலை சிறுமிகளை கொடூரமாக கொன்றொழித்து இன்றுடன் ஆண்டுகள் பதினொன்று ஆகிவிட்டது.

இலங்கை படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களில், வரலாற்றில் மிகவும் கறைபடிந்த, அனைவர் மனதையும் உருக்கும் கோரச் சம்பவ பட்டியலில் இதுவும் ஒன்று.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு இதே நாளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், அப்பாவி சிறுமிகள் 61 பேர் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.

அனைவர் மனதையும் நெகிழ வைத்த இந்தச் சம்பவத்திற்கு பல நாடுகளும் மனித நேய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருந்த போதும், செஞ்சோலையில் சிறுவர் போராளிகளே இருந்தனர் என அப்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் நியாயம் கற்பித்திருந்தது.

நீதி கிடைக்காத கடந்த கால அநீதிகளின் பட்டியலில், இச் சம்பவமும் இடம்பிடிக்க, இன்றுவரை வெறும் நினைவாக மாத்திரம் இச் சம்பவம் இருப்பது வேதனையானது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து, தமது அவயவங்களை இழந்து வாழும் சிறுமிகள், இன்றும் தமது வாழ்க்கையை செம்மைப்படுத்த வழியின்றி திண்டாடுகின்றனர்.

இவ்வாறானவர்களின் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதோடு, அன்றைய படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை, செஞ்சோலை சிறுவர் இல்லம் இன்றும் இயங்கி வரும் நிலையில், தமக்கு கல்வி கற்க போதிய வசதி, வேலைவாய்ப்பு போன்றவை எட்டாக்கனியாக உள்ளதென வடக்கு முதல்வரிடம் அண்மையில் அங்குள்ள சிறுமிகள் முறையிட்டடிருந்தனர். இக் கோரிக்கைகள் தொடர்பாக தமக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *