பிரதமர் மோடி வாக்குறுதியை மீறிவிட்டார் – சந்திரபாபுநாயுடு தாக்கு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.

முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். வாக்குறுதியை காப்பாற்றாத பிரதமர் மோடிக்கு ஆந்திர மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில் மீண்டும் பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி ஆந்திர மக்களின் உணர்வுகளில் விளையாடுகிறார். பற்றி எரியும் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்காமல் அரசியல் ரீதியாக செயல்படுகிறது.

கர்நாடகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு திருப்பதியில் நடந்த பேரணியில் பேசும் போது, 2016-ம் ஆண்டு அமராவதி தலைநகர் அடிக்கல் நாட்டு விழாவில் பேசும் போதும் அமராவதி நகரம் பசுமை வெளிபோல் உருவாக்கப்படும். டெல்லியை விட சிறப்பான நகரமாக அது இருக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அவர் சொன்ன வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற தவறிவிட்டார். மத்திய அரசு எங்களை ஏமாற்றி விட்டது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க ஒப்புப்கொண்டதால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் அதை நிறைவேற்றாததால் கூட்டணியை முறித்துக் கொண்டோம்.