இந்தியாவிலிருந்து பரவும் நுளம்புகளால் இலங்கைக்கு மீண்டும் மலேரியா : சத்தியலிங்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதனால் இலங்கை பெருமை கொண்டிருந்தது.

ஆனாலும் அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தம் நிலவிய காலங்களிலும் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் தமிழீழ சுகாதார சேவை என்பன மலேரியா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தன. இதன் காரணமாகவே மலேரியா அற்ற நாடென்ற பெருமை முழு இலங்கைக்கும் கிடைத்திருந்தது.

எனினும் தற்போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வருகின்ற படகுகள் மூலமாக மலேரியா நோய்க்காவி நுளம்புகள் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளன.

இது ஒரு ஆபத்தான சகுனமாகும். ஏற்கனவே டெங்கு உயிர்க்கொல்லி நோயின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் மலேரியா நோய் வருவதானது எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.

நோய்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்துவதென்பது சுகாதார திணைக்களத்தின் கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே இதனை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடியும்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *