“யாழ்.நல்லூர் பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிர்நீத்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.”
– இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடமையில் ஈடுபட்டிருந்தபோது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அருமந்த ஒருவரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடக்கு மாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்குப் பணித்துள்ளேன்” – என்றுள்ளது.