பொது எதிரணியின் இறுதி அஸ்திரமாகிறார் கோட்டா! – மக்கள் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்க உள்ளூராட்சி தேர்தல் ஆய்வுக் களமாகின்றது

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
இலங்கையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சித்துவரும் மஹிந்த அணியான பொது எதிரணி, இதற்கான தமது இறுதி அரசியல் அஸ்திரமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே முழுமையாக நம்பியிருக்கின்றது எனத் தெரியவருகின்றது.
இதன்படி  மக்கள் மத்தியிலுள்ள அவருக்குள்ள செல்வாக்கை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பரீட்சைக் களமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலை பொது எதிரணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பொது எதிரணி உறுப்பினர் ஒருவர், கோட்டாபயவையும், படையினரையும், அரசமைப்பையும் மையப்படுத்தியே பொது எதிரணியின் பிரசாரம் அமையும் எனவும், பிரசார பீரங்கியாக கோட்டாபய செயப்டுவதற்குரிய வாய்ப்பிருக்கின்றது எனவும் கூறினார்.
எனினும், எதிர்காலத்தில் முக்கிய தேர்தலில் களமிறங்குவதற்கு தயாராகிவரும் கோட்டாபய ராஜபக்ஷவை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தி அதில் தோல்வியேற்படும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என்ற கருத்தும் பொது எதிரணிக்குள் நிலவி வருகின்றது. ஆகவே, விரிவான ஆய்வின் பின்னரே இது விடயத்தில் இறுதி முடிவொன்று எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு தடவைகளே அப்பதவிக்குப் போட்டியிடலாம் என்ற சரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் மாற்றியமைத்தார். இதன்மூலம் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பதவியை வகிக்கலாம் என்ற நிலை உருவாகியது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டது.
புதிய அரசமைப்பிலும் இதே நிலைமை நீடிக்கும். எனவே, எதிர்வரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது. எனவேதான், கோட்டாபயவை பொது எதிரணயிலுள்ள மூத்த உறுப்பினர்கள் தமது இறுதி அஸ்திரமாகப் பார்க்கின்றன.
சிலவேளை, நாடாளுமன்றத்தின் ஊடாகவே ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும்முறை புதிய அரசமைப்பின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டால் பொதுத் தேர்தலில் பொது எதிரணியின் பிரதான வேட்பாளர் யார் என்ற கேள்வி எழும். மஹிந்தவா? கோட்டாவா? என வரும்போது பெரும்பாலான உறுப்பினர்கள் கோட்டாவுக்கே பச்சைக்கொடி காட்டக்கூடும். எனவேதான், கோட்டாவை மையப்படுத்தும் வகையில் பொது எதிரணியின் அரசில் வியூகம் வகுக்கப்பட்டு வருகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் மஹிந்தவுக்கு அடுத்தபடியாக போர் நாயகனாக கோட்டாபய ராஜபக்ஷவே பார்க்கப்படுகின்றார். பிரதான இரண்டு தேர்தல்களில் மஹிந்த தோல்வியடைந்திருந்தாலும் 45 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை அவர் தலைமை வகித்த அணி பெற்றிருந்தது. எனவே, கோட்டாவையும், மஹிந்தவையும் வைத்து தேர்தலை சந்தித்தால் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை மட்டும் மையப்படுத்தி வெற்றிபெற்றிவிடலாம் என்பதே பொது எதிரணியின் அரசியல் கணக்காக இருக்கின்றது. தேர்தலில் கோட்டாபய களமிறங்குவதற்கு சட்டரீதியாக எவ்வித தடங்கலும் ஏற்படாத வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டரம் வெற்றிபெற்றதும், அந்தத் தேர்தலை இலங்கைவாழ் சிங்கள மக்கள் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென கோட்டாபய அறைகூவல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மற்றும் அடுத்த பிரதான தேர்தல்கள் பற்றி கவனம் செலுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *