வடக்கு மாகாண சபை விவகாரம்: சம்பந்தன் – விக்கி சந்திப்புக்கு இன்னும் திகதி முடிவாகவில்லை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலந்து பேசித் தீர்ப்பதற்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வார இறுதியில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப் பட்ட போதிலும் இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் இறுதிசெய்யப்பட வில்லை.
இருவருக்கும் பொதுவான நண்பரான ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்கு பற்றுதலுடன் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றமையை சம்பந்தன் விரும்புகின்றார் எனக் கூறப்படுகின்றது.
சட்டத்தரணி கனகஈஸ்வரனின் பங்குபற்றுதலுடன் சந்திப்புக்கான ஒரு திகதியை ஒழுங்கு செய்வதில் கால தாமதம் எடுப்பதாகத் தெரிகின்றது.
நேற்றுப் பிற்பகலில் வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் விமானத்தில் கொழும்பு வந்துள்ளார்.
இன்று அவர் இலங்கை சட்டக் கல்லூரியின் தமிழ் மன்றம் நடத்தும் கலை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஆடி அமவாசையாகும். இரண்டு தலைவர்களுமே – சம்பந்தன், விக்னேஸ்வரன் இருவருமே – அது தொடர்பான கிரியைகளில் அதிக ஈடுபாடு உள்ளவர்கள் என்பதால் நாளை சந்திப்பு நடைபெறாது என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால் அடுத்த நாள் திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறலாம் எனவும் அவ்வட்டாரங்கள் கூறின.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோடு கேட்டபோது, “இதுவரை அந்தச் சந்திப்புக்கான ஒழுங்குகள் செய்யப்பட வில்லை” – என்று அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *