புதிய அரசியல் யாப்புக்கான முதன்மை அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் நடத்தப்பட்ட ‘இலங்கை மக்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது, புதிய அரசியல் யாப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ‘ நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்றினால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தோம். சமாதானம் இல்லாத காரணத்தினால் அது சாத்தியப்படவில்லை. தற்போது ஒற்றுமையான ஒரு சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறான தருணத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பணிகளை மேற்கொள்கின்றோம். இதுவே எமக்கான சரியான தருணமாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமாதானமான இந்த பயணம் நீடித்தால் ஜனவரி மாதத்தில் புதிய அரசியலமைப்புக்கான முதன்மை அறிக்கையினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி மேற்படி அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்துவது அல்ல என்றும் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை மக்களின் கருத்தை அறியவே இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.