Wednesday , October 15 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி

புதிய அரசமைப்புக்கு முன்னரே வருகின்றது தேர்தல் சட்டத் திருத்தம்! – உள்ளூராட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்துடன் தேசிய அரசு முயற்சி

புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே தேர்தல் திருத்தச் சட்டவரைபு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் நோக்குடனேயே இந்தச் சட்டவரைபைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

புதிய அரசமைப்பில் தொகுதிவாரிப் பிரதிநித்துவம் 60 சதவீதமும், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 40 சதவீதமுமாகக் கலப்பு முறையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த முறையில் நடத்துவது என்பதில் குழப்பமான நிலைமையே காணப்படுகின்றது. அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியிருக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சில தினங்களுக்கு முன்னர் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்ட முறையிலேயே உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனைப் பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், அனைத்துக் கட்சிகளும் இந்த யோசனைக்கு உடன்பட்டுள்ளன.

புதிய அரசமைப்புக்கு முன்னதாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால், அந்தத் தேர்தலைப் புதிய முறையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்காக உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர், கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …