கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் இடம்பெறவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் ஹசனலி தரப்பினர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பேச்சு எதிர்வரும் கிழமைகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள பேச்சு முடிந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பேச்சுக்கு அழைக்கப்படவுள்ளது.
“தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு தாக்கம் செலுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டேதான் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவேண்டுமென நாம் விரும்புகின்றோம்” என்று ஹசனலி தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
“விடுதலைப்புலிகளால் துரோகிகள் பட்டம் சூட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் ஏகோபித்த நலனுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுமானால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை ஏன் ஏற்படுத்தமுடியாது?” என்று முஸ்லிம் கூட்டமைப்பை ஆதரிப்பவர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளனர்.
“நல்லாட்சி அரசில் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகின்ற நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பின்கீழ் செயற்படும்போதுதான் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மிக இலகுவாக இருக்கும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் கூட்டமைப்பால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முடியாது என்றும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒதுங்குவதற்கு ஒரு கூடாரத்தைத் தேடுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதை வைத்துப் பார்க்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்துகொள்வதற்கு விரும்வில்லை என்பது தெளிவாகின்றது. அதேபோன்றுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் முஸ்லிம் கூட்டமைப்புக்கு எதிராக தங்களது சமூக வலைத்தளங்களில் எழுதிவருகின்றனர்.
எது எப்படியிருந்தாலும் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவில் மாற்றங்கள்கூட நிகழலாம் என்று முஸ்லிம் கூட்டமைப்பை ஆதரிப்பவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.