சுகாதார அமைச்சின் தகவல்கள் பொய்! மூன்று இலட்சம் பேருக்கு டெங்கு!! – மஹிந்த அணி விளக்கம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இலங்கையில் இப்போது சுமார் 71 ஆயிரம் டெங்கு நோயாளிகளே இருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் தகவல்கள் அப்பட்டமான பொய் எனவும், மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என்பதே உண்மை எனவும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளவில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த பிரசன்ன ரணதுங்க எம்.பி. மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

“அரசின் மிகப் பலவீனமான நடவடிக்கைகளால் டெங்கு நோய் கட்டுக்கடங்காமல் போயுள்ளது. சுத்திகரிப்புப் பணி என்ற பெயரில் வெறும் கண்துடைப்பே நடந்துவருகின்றது. வைத்தியர்களின் தொடர் வேலைநிறுத்தங்களால் அப்பாவி மனித உயிர்கள் ஆபத்தில் தள்ளப்படுகின்றன.

இந்த அரசு கொடுக்கும் வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை. ஜனாதிபதியினதும், பிரதமரினதும் கொள்கைகள் வட துருவம், தென் துருவம் போல ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணாக உள்ளன. வீண் விரயங்களும் அர்த்தமற்ற அபிவிருத்தித் திட்டங்களும் நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த அரசை ஆட்சிபீடத்தில் ஏற்றிய மக்கள் இன்று விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டார்கள். எதிர்காலம் இருட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்திலிருந்து மீண்ட இந்த நாட்டில் இன்று இன, மத, மொழி பாகுபாடுகள் விஷ ஜந்துக்களாகப் புகுந்துள்ளன” – என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *