உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நிறைவேற்றுமாறு மஹிந்த அணி காலக்கெடு! –

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்த திருத்தச் சட்டமூலத்தை இவ்வாரத்துக்குள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி துரிதகதியில் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மஹிந்த அணியான பொது எதிரணி வலியுறுத்தியது.

நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழான கேள்விநேரத்தில்,

“உள்ளூராட்சி சபைத் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதிலும், அது தொடர்பான விவாதம் இவ்வாரம் நடத்தப்படுவதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங்குப் பத்திரத்தில் இல்லை. எனவே, இவ்வாரத்துக்குள் அது நிறைவேற்றப்படவேண்டும்” என்று தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பைசல் முஸ்தபா, “உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவேண்டுமாயின் அவற்றின் செயற்பாடுகள் ஆரம்பிக்கவேண்டிய காலஎல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை திருத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது” என்று கூறினார்.

அதேவேளை, குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் வெள்ளியன்று விவாதத்துக்கு எடுப்பது பற்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படவேண்டும் என்று சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். சபாநாயகரும் இது பற்றி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயலாம் என்று கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *