பல்டி அடித்தது வைத்தியர் சங்கம்! கைவிடப்பட்டது பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடுதழுவிய ரீதியில் இன்றுமுதல் தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பை ஒருவார காலத்துக்கு ஒத்திவைத்திருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் நேற்றுக் கொழும்பில் ஏற்பாடுசெய்யப்படிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டது.

அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:-

“சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக நாளை (இன்று) முதல் மேற்கொள்ளப்படவிருந்த நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் பல்வேறு காரணங்களைக் கருத்தில்கொண்டு ஒருவார காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) பிற்பகல் கொழும்பு பேராயர் கலாநிதி மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை எங்களுடன் கலந்துரையாடியிருந்தார். இதன்போது நாட்டில் டெங்கு நோய் தலைவிரித்தாடுவதைக் கருத்தில்கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரியதற்கு அமைவாகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” – என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் சைட்டம் விவகாரம் குறித்து அரசின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுமுதல் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசின் இரு பங்காளிக் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

அத்துடன், தமது கோரிக்கையை மீறி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்குமாயின் அதற்கு முகங்கொடுக்க அரசு தயாராகவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்தே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பல்டி அடித்தது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

About தமிழ்மாறன்

View all posts by தமிழ்மாறன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *