கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதியையடுத்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வந்த தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமக்கு நியாயமான பதில் கிட்டியதை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தபால் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்துள்ளார்.
தபால் சேவை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 10 இலட்சம் அஞ்சல்கள் விநியோகிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாக ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளானர்.
குறிப்பாக, முதலாம் வருடத்திற்கான பாடசாலை விண்ணப்பங்களை அனுப்பும் நடவடிக்கை மற்றும் பல்கலைக்கழக நுழைவுக்கான செயன்முறைகள் நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில் தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள இப்போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.