பாகிஸ்தான் ஆயில் டேங்கர் லாரி தீவிபத்தில் பலி 175 ஆக அதிகரிப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரி தீப்பற்றிய விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி கடந்த 25-ம் தேதி பெட்ரோல் டேங்கர் லாரி, பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் நகர் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியிலிருந்த பெட்ரோல் சாலையில் சிந்தி ஆறாக ஓடியது.

இதையறிந்த, அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் பெட்ரோலை பிடிக்க பாட்டில்கள் மற்றும் கேன்களுடன் லாரியை சூழ்ந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனால், லாரியைச் சுற்றி பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மேலும் சிலர் உயிரிழந்தனர். இதனால், நேற்றைய நிலவரப்படி 165 பேர் உயிரிழந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லாகூர், முல்தான் மற்றும் பைசாலாபாத் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தனர். இதனால், உயிரிழப்பு 175 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு 60 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு தீக்காயம் அடைந்தவர்கள் உயிர்பிழைத்தால், அது அதிசயமாக இருக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

டேங்கர் லாரியில் இருந்து சிந்திய பெட்ரோல் மீது சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *