வெள்ளம், வறட்சியால் 14 இலட்சம் பேர் பாதிப்பு! – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் சுமார் ஆறு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள ஏனைய தகவல்கள் வருமாறு:-

வடக்கிலும் கிழக்கிலும் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 43 ஆயிரத்து 683 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு இலட்சத்து 49 ஆயிரத்து 752 பேர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகூடிய பாதிப்பு வடமாகாணத்திலேயே ஏற்பட்டிருக்கின்றது. அங்கு ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 931 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 55 ஆயிரத்து 249 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் 213 பேர் மரணமடைந்துள்ளனர். 154 பேர் காயமடைந்துள்ளனர்.
வானிலை அவதான நிலையத்தின் எதிர்வுகூறலின்படி அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யலாம். சப்ரகமுவ, மத்திய மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கடுமையான மழையும், கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஓரளவு மழையும் பெய்யலாம்.

அத்துடன், நாட்டின் வடமாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *