காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அறியமுடிகின்றது.
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் எனவும், அதன் பின்னர் விரைவில் காணாமல்போனோர் அலுவலகம் நிறுவப்படக் கூடும் எனவும் இதனுடன் தொடர்புடைய தரப்பினர் தெரிவித்தனர்.
காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவுவதற்கான சட்டவரைபு நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) முன்வைத்த திருத்தம் உள்ளடக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் திருத்தத்தை உள்ளடக்கிய திருத்தச் சட்டம், அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திருத்தச் சட்டம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்றம் அங்கீகரித்த பின்னர், வர்த்தமானியில் சட்டம் பிரசுரிக்கப்படும். அதன் பின்னர் காணாமல்போனோருக்கான அலுவலகம் நிறுவப்படும் என்றும் கூறப்படுகின்றது.