நாடு தழுவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

சயிட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலும் 24 மணித்தியால வேலை நிறுத்தத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்புடன் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்தியர்களும் இணைந்து கொண்டுள்ளதுடன், அவசர சிகிச்சைப் பிரிவுகள் வழமைபோன்று வைத்தியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தம் காரணமாக அரச வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து சிகிச்சைக்காகச் சென்ற நோயாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வேலை நிறுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்திய சேவைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதுடன் சிகிச்சைக்காக சென்ற பெருமளவான நோயாளர்கள் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் வவுனியாவில் இடம்பெற்றுவரும் போராட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும் சில அவசரச் சிகிச்சைகள் மற்றும் விபத்துப் பிரிவுகள் மட்டுமே இயங்குவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த போது, அவர்கள் தாக்கப்பட்டமை மற்றும் கைதுசெய்யப்பட்டமை, வைத்திய சபைக்கு கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட நபரைக் கைதுசெய்யாமை, தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள், உள்ளிட்ட சில காரணங்களுக்காகவே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *