Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி

இலங்கை பல்லின மக்களும் வாழும் நாடு; சிங்களவரும் இந்தியாவிலிருந்தே வந்தனர்! – மகாவம்சக் கதை கூறி ஞானசார தேரருக்கு மனோ பதிலடி

“சிங்களவர்களும் இந்தியாவிலிருந்தே வந்தனர் என்று நீங்கள் கூறும் அதே மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். இங்கு தமிழ்மொழியும் அரச கரும மொழியாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.”

– இவ்வாறு எடுத்துரைத்து பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன்.

பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெறவிருந்தது.

எனினும், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தேசிய சகவாழ்வு அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு மனோ தகுதியற்றவர் என தேரர் கூறியதையடுத்து சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை அமைச்சுக்கு வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முரண்டுபிடித்தனர்.

இதையடுத்து முற்பகல் 10.45 மணியளவில் அமைச்சர் மனோ கணேசன், அலுவலகத்துக்கு வந்து தேரர்களை சந்தித்தார். ஆரம்பம் முதலே அமைச்சருடன் கடுந்தொனியிலேயே கலகொட அத்தே ஞானசார தேரர் பேசினார். இனவாதத்தையும் கக்கினார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு எனக் கூறி ஒருகட்டத்தில் மகாவம்சத்தையும் உதாரணம் காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் மனோ, “இது சிங்கள, தமிழ், முஸ்லிம், பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க நாடு. எல்லோரும் இந்நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். சிங்களவரும் இந்தியாவிலிருந்து வந்தனர் என்றே மாகாவம்சம் கூறுகின்றது. விஜய இளவரசன் இந்தியாவில் இருந்து இந்நாட்டுக்கு வந்து இறங்கி, ஆதிவாசி குவேனியை மணந்து, பின் அவளை விட்டுவிட்டு, தென்னிந்திய பாண்டிய நாட்டில் இருந்து, இளவரசியை அழைத்து வந்து, மணந்துகொண்ட பிறகே சிங்கள இனம் உருவாகியது என்றே மகாவம்சத்தில் நான் படித்துள்ளேன்” என்று பதிலளித்தார்.

அத்துடன், அமைச்சுப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் எனக் கூறப்பட்டதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ கணேசன், “எங்கள் அமைச்சுப் பொறுப்புகளைத் தீர்மானிப்பது ஜனாதிபதி. நாங்கள் மக்கள் ஆணையை பெற்றே ஆட்சிக்கு வந்துள்ளோம். சிங்களவர் மத்தியில் நான் பிறந்து வாழ்கின்றேன். எனக்கு சிங்கள மக்களைப் பற்றி எவரும் எடுத்துக்கூற அவசியமில்லை. மும்மொழி சட்டமும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம்; மொழிக்கொள்கை. சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள்; தேசிய மொழிகள். ஆங்கிலம் இணைப்பு மொழி., அதுதான் அரசமைப்புச் சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது. சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும்” – என்றார்.

இறுதியில் இந்நாட்டில் சிங்கள பௌத்த மற்றும் தமிழ் இந்து மக்கள் எதிர்நோக்கும் விவரங்களைப் பட்டியலிட்டு அமைச்சரிடம் தருவதாகவும், அவை தொடர்பில் நடவடிக்கை எடுத்து இந்நாட்டில் சகவாழ்வை உறுதி செய்யுமாறு கூறிவிட்டு, ஞானசார தேரர் தனது ஆதரவுப் பிக்குகளையும் அழைத்துக்கொண்டு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு கட்டடத்தில் இருந்து வெளியேறினார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …