Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்

முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக் காட்டுங்கள்! – மஹிந்த அணிக்கு அரசு சவால்

“ஒருவாரம் கால அவகாசம் தருகின்றோம் முடிந்தால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியை கவிழ்த்துக் காட்டுங்கள்.”

– இவ்வாறு மஹிந்த அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மகிந்த அமரவீர சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குச் சார்பாகச் செயற்பட்டு வந்த வட மத்திய மாகாண அமைச்சர் கே.எச்.நந்தசேனவை அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அப்பதவிக்கு மாகாண சபை உறுப்பினர் எச்.ஹேரத் பண்டாவை அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால நியமித்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதிலடி கொடுக்கும் வகையில் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டு வந்த குறித்த மாகாண சபையின் மற்றுமொரு அமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளார். இதன் காரணமாகவே மைத்திரி அணியின் ஆட்சி வட மத்திய மாகாண சபையில் ஆட்டங் கண்டுள்ளது. இதேவேளை, வட மத்திய மாகாணசபையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 22 பேரில் 17 பேர் மஹிந்தவுக்கு ஆதரவானவர்கள் என்பதால் எவ்வேளையிலும் வட மத்திய மாகாண சபையின் ஆட்சி மாற்றமடையலாம் என்ற நிலையே காணப்படுகிறது. அதேவேளை, வட மத்திய மாகாண சபையின் தற்போதையை ஆட்சியை விரைவில் கவிழ்த்து புதிய ஆட்சியை அமைப்போம் என்றும் மஹிந்த அணியினர் சூளுரைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தவிடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற வகையில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மகிந்த அமரவீர,

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொரு வேளையிலும் நகைச்சுவையாக கதை சொல்லி வருகின்றனர். வட மத்திய மாகாண சபையை வீழ்த்துவதும் இதுபோன்ற ஒரு கதைதான்.

அமைச்சுப் பதவிகள் இல்லாதபோதும், அமைப்பாளர் பதவிகள் நீக்கப்படும் போதும் ஒவ்வொருவரும் தங்களது மனக் கவலைக்கும், கோபத்துக்கும் ஒவ்வொரு விதமாக கதைகளைப் பரப்பி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குழப்பமடைவதில்லை.

வட மத்திய மாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்று கூறும் மஹிந்த அணியினருக்கு ஒருவார காலஅவகாசம் வழங்குகின்றோம் முடிந்தால் ஆட்சியைக் கவிழ்த்துக்காட்டுங்கள்” – என்றார்.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …