“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்), நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஞா.ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ பேசும்போது, “நாட்டுக்கு ஆபத்தான அரசமைப்புக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே அரசமைப்பு உருவாக்க முயற்சி தொடர்பில் அரசு உரிய வேகத்தில் செயற்படவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “இந்தப் பேரணியை அரசும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும். இதனால் அரசமைப்பு உருவாக்க முயற்சிகளில் அரசு பின்வாங்கக்கூடிய ஆபத்து இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.