முஸ்லிம் தீவிரவாதிகளை ஒழிப்பது என்ற போர்வையில் இந்திய இராணுவம் மீண்டும் இலங்கைக்குள் நுழையும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“எரிபொருள் பாவனையில் இந்தியா உலகின் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்த எரிபொருளை அடிப்படையாக வைத்தே அந்த நாடு இலங்கைக்குள் நுழைந்து முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு முற்படுகின்றது.
திருகோணமலையில் இருக்கின்ற 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை இந்தியாவுக்குக் கொடுத்துவிட்டது. இப்போது இந்தியா அதைச் சுற்றியுள்ள முழு நிலத்தையும் இலங்கையிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கையும் கொடுப்பதற்குத் தயாராகிவிட்டது.
சீனா போன்ற நாடுகளைச் சமாளிப்பதற்கு இந்தியாவுக்குத் திருகோணமலைத் துறைமுகம் தேவைப்படுகின்றது. இப்போதைய எண்ணெய்க் குதங்களில் எரிபொருளை இந்தியா களஞ்சியப்படுத்தத் தொடங்கியதும் இந்தியாவின் போர்க் கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்துக்குத் தொடர்ச்சியாக வரும்.
இந்த எண்ணெய்க் குதங்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறிப் பாதுகாப்பு என்ற போர்வையில் இந்திய இராணுவத்தைத் திருகோணமலையில் நிறுத்துவதற்கான திட்டம் ஒன்று இந்தியாவிடம் உண்டு.
இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தான ஒரு திட்டமாகும்.இதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் இது தொடர்பில் தெளிவு பெறவேண்டும். எமது வளங்களை வெளிநாட்டு சக்திகள் சுரண்டுவதைத் தடுப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும்” – என்றார்.