கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினராக கலைஞர் 60 ஆண்டுகள் பணியாற்றியதையொட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தும் மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என்றால் வறட்சி நிவாரணமாக ரூ.20 ஆயிரம் கோடி தேவை என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன? எனவே தமிழக அரசு சொல்வதில் உண்மை இல்லை.

தமிழகத்தில் மின்வெட்டால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் மின்துறை அமைச்சருக்கு மின்வெட்டு பற்றி சிந்திக்க நேரம் இல்லை. அவர்கள் கட்சி இரண்டாக உடைந்துள்ளதால் அதை ஒன்று சேர்க்கும் முயற்சியில்தான் கவனம் செலுத்துகிறார்களே தவிர மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை.

இரு அணிகளும் இணைவது சம்பந்தமாக முதன் முதலில் மின்துறை அமைச்சர் வீட்டில்தான் ஆலோசனை நடந்தது. அதில் காட்டும் முக்கியத்துவத்தை மக்கள் பிரச்சனையிலும் காட்ட வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது ஓய்வெடுக்க செல்லும் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்னொரு காவலாளி காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறும் நேரத்தில் காவலாளி கொலையும் மர்மமாக இருந்து விடக்கூடாது. காவலாளி கொலை மர்மம் பற்றி உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

விவசாயிகள் பிரச்சனைக்காக முழு அடைப்பு போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அய்யாக்கண்ணு எங்களை சந்தித்து பேசினார். விவசாயிகளின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல பிரதமரிடம் நேரம் கேட்டிருந்தோம்.

இதுவரை எங்களுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கித் தரவில்லை. அவர் நேரம் ஒதுக்கித் தந்தால் உடனே நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *