ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும், மே தின வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஜனவெள்ளம் இம்முறை கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்காக சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன எனவும், மக்களுக்கான போதியளவு குடிதண்ணீர், கழிவறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும், கண்டி மகளிர் உயர்கல்லூரியின் முன் ஆரம்பமாகவுள்ள பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.