Monday , October 20 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / மயிலிட்டித்துறைமுகப் பகுதி வெகுவிரைவில் விடுவிப்பு! – இருவேறு கூட்டங்களில் உறுதி

மயிலிட்டித்துறைமுகப் பகுதி வெகுவிரைவில் விடுவிப்பு! – இருவேறு கூட்டங்களில் உறுதி

மயிலிட்டித்துறைமுகம் உள்ளடங்கலாக அந்தப் பிரதேசத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் வெகுவிரைவில் விடுவிப்பார்கள் என்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு கூட்டங்களில் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன. அவற்றை விடுவிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் – அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோதும் அது விடுவிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில்கூட மயிலிட்டித் துறைமுகத்தின் விடுவிப்புத் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மயிலிட்டித் துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இதன்போது, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் உள்ளிட்ட குழுவினரையும் அவர் அழைத்துச் சென்றிருந்தார்.

மக்கள் வாழ்ந்த பகுதிகள் உள்ளிட்ட மயிலிட்டிப் பிரதேசத்தை, வடக்கு மாகாண ஆளுநருக்கு அவர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர். இதன்போது மயிலிட்டித்துறைமுகத்தில் – மக்கள் பாவனைக்கு விடுவிக்காத பிரதேசத்தில், சிமெந்து இறக்குமதி நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் ஆளுநருக்கு புனர்வாழ்வுச் சங்கத்தினர் காண்பித்துள்ளனர்.

“எங்களிடம் மயிலிட்டித்துறைமுகத்தை ஒப்படைக்கவில்லை. ஆனால், தனியார் வர்த்தகர் ஒருவர் இதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர்” என்பதை ஆளுநருக்கு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் பின்பு கருத்துத் தெரிவித்த ஆளுநர், “இந்தப் பகுதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பினர் இணங்கியுள்ளனர். விரைவில் முழுமையாக விடுவிக்கப்படும். ஆகக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் இங்கு மக்கள் மீள்குடியமர முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பலாலி படைத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும் இடையேயான சந்திப்பின்போதும் மயிலிட்டி வெகுவிரைவில் விடுவிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

Check Also

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது - இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல

கட்சியில் இருந்து வெளியேறினால் திரும்ப சேர முடியாது – இ.தொ.கா பஸ் தரிப்பிடம் அல்ல ”என்னை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததாக …