அரசியல் யாப்பின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னமும் இரண்டு வார காலங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதும் திருத்தங்களை மேற்கொள்வதா அல்லது அதனை அவ்வாறே அமல்படுத்துவதா என்பது குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பின் போது, ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்க நடைமுறையானது, தற்போது எந்தக் கட்டத்தில் உள்ளது என்றும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் முனைப்பை அரசாங்கம் கைவிட்டுவிட்டதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டதுக்கு,
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அரசியலமைப்பை பொறுத்தவரை அரசியல் யாப்புச்சபை அடுத்த மாதம் கூடவுள்ளது. அரசியல் யாப்பு வழிகாட்டுதல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்னும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அடுத்த இரண்டு வார காலப்பகுதியில் நாட்டில் உள்ள முக்கிய அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைமைப் பதவிகளில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. வினைத்திறன் உள்ள வகையில் கடமைகளை முன்னெடுத்துச் செல்லுவதற்காகவே இந்த மாற்றங்கள் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெசாக்கிற்கு முன்பாக மாற்றங்கள் இடம்பெறுவதை நீங்கள் பார்க்கத்தானே போகின்றீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிற்கு சேதம் ஏற்படும் வகையில் நாட்டின் வளங்களை விற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் பெருமளவில் கிடைப்பதில்லை. இந்தியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிடம், நாட்டின் வளங்களை விற்றுவிட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். நாட்டிற்கு சேதம் ஏற்படும் வகையில் நாம் வளங்களை விற்கப்போவதில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்களை நாட்டிற்கு இழைக்கும் மிகப்பெரிய தேசத்துரோகம். கடந்த மஹிந்த அரசாங்கத்திலேயே இவ்வாறு துரோகம் இழைக்கப்பட்டது. அது துறைமுகநகரத் திட்ட உடன்படிக்கையாகும். சீனாவிற்கே முழுக் காணி உரிமையும் எழுதிக்கொடுக்கப்பட்டவாறு 200 ஹெக்டெயர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தின் மேலாக ஹெலிகொப்டரில் பறப்பதற்குகூட சீன அரசாங்கத்தின் அனுமதி பெறக்கூடிய நிர்ப்பந்தம் எற்பட்டிருக்கும். ஆனால் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சீனாவுடனான சுமூகமான உறவுகளைப் பயன்படுத்தி அந்த நிலப்பகுதியை குத்தகைக்குரிய நிலப்பகுதியாக மாற்றியமைத்தது“ என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.