மருதங்கேணியில் கடல்நீரை நன்னீராக்குவதினால் சூழலுக்குப் பாதிப்பு இல்லை: கலாநிதி கே.அருளானந்தம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

யாழ். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தினால் சுற்றுச் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என நாறா நிறுவனத்தின் சமுத்திரவியல்துறை தலைவர் கலாநிதி கே.அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படும் என நாறா நிறுவன ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது ஆய்வறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இந்த திட்டத்தினால் சூழலுக்கு பாதிப்பு உள்ளதாக கூறப்படவில்லை. சூழலில் சிறு மாற்றம் உண்டாகலாம். அது சகல அபிவிருத்தி திட்டங்களிலும் நடைபெறுவதே.

மேற்படி திட்டத்தை மக்கள் நிரகரித்த முதலாவது காரணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடல்நீரில் உப்பு தன்மை அதிகரிக்கும் என்பது. அது தொடர்பாக ஆராய்ந்தபோது கடல்நீர் எடுக்கப்பட்டு வடிகட்டப்பட்டு பின்னர் கடலில் விடப்படும்போது அந்த பகுதியில் 22 மீற்றர் பகுதிக்குள் 2 அலகு உவர் தன்மை அதிகரிக்கும். ஆனால் அது நன்மை பயக்குமே தவிர தீமையாக அமையாது. அந்த பகுதியில் மீன்வளம் பெருகுவதற்கு இது பெரிதும் பங்காற்றும்.

அடுத்ததாக கடல்நீரை தரைக்கு எடுப்பதற்கு அமைக்கப்படும் குழாய்களால் மீனவர்களின் வலைகள் சேதமடையும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், குழாய்களை கடலின் அடிப்பகுதியில் வைப்பதற்கே திட்டமிடப்பட்டது என்றார்.

இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு மாற்றீடாக, யாழ்.மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *