தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென வெளியான செய்தி உண்மையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் குறித்து பலவாறான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ள கோட்டா, அதன் காரணமாகவே அவர் உயிருடன் உள்ளாரென தெரிவிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான் உயிரிழந்ததை படையினர் உறுதி செய்ததாக கோட்டா மேலும் தெரிவித்துள்ளார்.
பொட்டு அம்மான் உயிருடன் இருந்தால் தற்போது அவர் வெளியில் வந்திருக்க வேண்டும் என்றும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் கோட்டா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொட்டு அம்மான் உயிருடன் இல்லையென தான் எந்த சந்தர்ப்பத்திலும் குறிப்பிடவில்லை என விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும் கடந்த மஹிந்த அரசாங்கத்தில் பிரதியமைச்சராக கடமையாற்றியவருமான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.