வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பது தொடர்பாகவும், மாவட்ட செயலகங்களில் இந்த வார இறுதியில் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
வடக்கில் யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் ஸ்ரீலங்கா அரச படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை அவர்களிடம் கையளிப்பது தொடர்பாக, கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 அளவில் இடம்பெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ருவன் விஜேவர்தன மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மன்னார் முள்ளிக்குளத்தில் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் ஒருவாரகால அவகாசம் வழங்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் கடற்படை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், யாழ்ப்பாணம் வலிகாமம் மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும், கிளிநொச்சி மக்களின் நிலங்களை விடுவிப்பது எதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.