ஒரு நாள் இடர்பாடுகளை பொறுத்துக்கொண்டு விவசாயிகளுக்காக ஓரணியாக திரள்வோம் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி.மு.க செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆட்சியிலிருந்தாலும் மக்களின் நலனைப் புறக்கணிக்கும் முதல்வரும் அமைச்சர்களும் உள்ள மாநிலத்தில், ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கமாக தி.மு.கழகம் இருக்கிறது.
வறட்சியாலும் கடன் தொல்லைகளாலும் வாழ்வுரிமை இழந்து, தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் உள்ளாகி வரும் தமிழக விவசாயிகளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறும் அ.தி.மு.க. அரசை பலமுறை வலியுறுத்தியும் கேளா காதினராக ஆட்சியாளர்கள் இருப்பதால், பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான அழைப்பை விடுத்தது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்களும் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் முன்னின்று கூட்டியிருந்தாலும், இதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரின் கருத்துகளையும் கேட்டறிந்து அதனடிப்படையில் விவசாயிகளின் உரிமைகளை மீட்கவும், தமிழகத்தின் நலன்காக்கவும் தேவையான தீர்மானங்கள் வடிவமைக்கப்பட்டு, அனைத்துத் தலைவர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளன.
அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, தமிழக விவசாயிகளின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, அனைத்து தலைவர்களும் தெரிவித்த கருத்துகளும், வழங்கிய ஒத்துழைப்பும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
விவசாயிகளின் உரிமைக்கான கூட்டத்திற்காக நாம் அழைப்பு விடுத்திருந்த கட்சிகளில் சில இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சில காரணங்களுக்காக அவர்கள் புறக்கணித்திருந்தாலும். தமிழக விவசாயிகளின் நலனில் அவர்களுக்கும் அக்கறை இருப்பதை நாம் மறுக்க முடியாது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை அவர்களும் மனம் உவந்து வரவேற்கவே செய்வார்கள் என்பது நிச்சயம்.
எந்தவொரு தனிமனிதரையோ, அமைப்பினரையோ கட்டாயப்படுத்துவது கழகத்திற்கோ, நம்முடன் ஒருங்கிணைந்துள்ள கட்சிகளுக்கோ நோக்கமல்ல. நாம் உயிர்வாழ உணவளிக்கும் விவசாயிகள், தங்களின் உயிரைப் பாதுகாக்க முடியாமல் தற்கொலைக்கும் அதிர்ச்சி மரணங்களுக்கும் ஆளாகும் அவல நிலையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில், ஒரே ஒரு நாள் நமக்கு ஏற்படும் இடர்பாடுகளைப் பொறுத்துக் கொண்டு, விவசாயிகளின் உரிமைகளை மீட்டுத் தர துணை நிற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
பொதுமக்களிடம் இந்த நோக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காக வருகிற 22-ந்தேதி அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தலைவர்கள் எடுத்துச்சொல்லும் கருத்துகளை தலைவர் கலைஞரின் உடன் பிறப்புகளும் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நமக்காக அல்ல.. நமக்கு வாழ்வளிக்கும் விவசாயிகளுக்காக ஒரு நாளை அர்ப்பணிப்போம். விவசாயிகளின் வாழ்வுரிமையை மீட்போம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.