தமிழகத்தில் 25-ந்தேதி பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தை தி.மு.க ஒருங்கிணைத்துள்ளது. அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க பிற கட்சிகள் பங்கேற்கவில்லை.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், மனித நேய மக்கள் கட்சி மற்றும் தி.மு.க கூட்டணி கட்சிகள் இதில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளன.
பா.ஜனதா, அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. முழு அடைப்பு போராட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த போராட்டம் நடக்கிறது.
முன்னதாக 22-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதற்கான காரணம் குறித்து அனைத்து தலைவர்களும் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் நடைபெற உள்ள ‘பந்த்தை’ வெற்றிகரமாக நடத்தி முடிக்க தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. கடையடைப்பு போராட்டத்திற்கு இன்னும் வணிகர்கள் ஆதரவு தரவில்லை. ஆனால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் 25-ந்தேதி தமிழகத்தில் பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க (எல்.பி.எப்) பொதுச் செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தின் அவசியம் குறித்து பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு எடுக்கின்றோம்.
அதன் அடிப்படையில் 25-ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபடுவதால் அன்று பஸ் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குமரேசன் கூறுகையில், இதுவரையில் அரசியல் சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவு அளித்தது இல்லை. அவர்கள் அணுகினால் பரிசீலனை செய்வோம் என்றார்.