தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது. சசிகலா சிறைதண்டனைக்கு பிறகு துணை பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் கட்சி பணியை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்களை வருமான வரித்துறை கைப்பற்றியது. இதையடுத்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
வருமானவரித்துறையின் பிடியில் விஜயபாஸ்கர் சிக்கி இருப்பதால் மற்ற அமைச்சர்களுக்கு பிரச்சினை ஏற்படும் என்ற சர்ச்சை கிளம்பியது.
அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் செய்திகள் வெளியாயின. இதே போல பிளவு பட்டிருக்கும் அ.தி.மு.க.வை இணைக்கும் முயற்சியும் ஒரு புறம் நடந்துவருவாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைமை செயலகத்திற்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று பகல் 12.30 மணிக்கு சென்றார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மூத்த அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
இரு அணிகளாக செயல்படும் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.