நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனில் தமிழர் தரப்பு நேரடியாக அரசுடன் பேச்சுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நடைபெறவிருக்கின்ற தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேசத்தை வரவழைத்து தமிழர் தரப்பு தீர்வு காண நினைத்தால் அது ஒருபோதும் சாத்தியமற்றதாகும். புதிய அரசியல் அமைப்பின் மூலம் இனவாதம் பரவுவதையோ அல்லது நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்துவதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச தரப்புடன் இணைந்து நாட்டைப் பிரிக்க எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நல்லாட்சி அரசே தடையாக செயற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது.
பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசு சரியான முறைமையைக் கையாண்டு வருகின்றது. நாம் எமது உள்ளக பொறிமுறை மூலமாக பிரச்சினைகளைத் தீர்க்க உறுதியாகச் செயற்பட்டு வருகின்றோம்” – என்றார்.