மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி (சைட்டம்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஓர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் என்பதால் அதை எக்காரணம் கொண்டும் மூடுவதற்கு அரசு இடமளிக்காது என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-
“சைட்டம் பிரச்சினை குறித்து கலந்துரையாட இலங்கை வைத்தியர் சங்கத்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தபோதிலும் அவர்கள் அந்த அழைப்பை அசட்டை செய்துவிட்டு மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கை வைத்தியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. எனவே, அந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை அவர்கள் அமைதியாக இருக்கவேண்டுமே தவிர, மாணவர்களைப் போராட்டங்களில் ஈடுபடுத்தி அவர்களது கல்வி நடவடிக்கைகளைப் பாழ்படுத்தக்கூடாது. ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளாமல் இலங்கை வைத்தியர் சங்கம் இரு பக்கங்களிலும் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். போராட்டங்களும் கண்டன அறிக்கைகளும் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்” – என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.





