தமிழர் அபிலாஷைகளை வென்றெடுக்க சர்வதேசம் துணை நிற்க வேண்டும்! – ஜேர்மனிய நாடாளுமன்றத் தலைவரிடம் எடுத்துரைத்தார் சம்பந்தன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

“தமிழ் மக்களின் அபிலாஷைகள் புதிய அரசமைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் – எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகம் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும்.”

– இவ்வாறு தன்னைச் சந்தித்த ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவரிடம் எடுத்துரைத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

இலங்கை வந்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் தலைமையிலான குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போது,

“இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் எமது நிலைப்பாட்டை இந்தச் சந்திப்பில் தெளிவுபடுத்தினேன். அதாவது, தமிழ் மக்களின் அபிலாஷைகள் – வேணவாக்கள் புதிய அரசமைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் – எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை வென்றெடுப்பதற்கு சர்வ்தேச சமூகம் எங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. காணி விடுவிப்பு மந்த கதியில் நடைபெறுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு முழுமை பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்பினர். அது தொடர்பில் அரசு கரிசனை காட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரி 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை – அப்படியே – அச்சுப்பிசகாமல் நடைமுறைப்படுத்த – ஒப்பேற்றுவதற்கு இலங்கை அரசு இணங்கினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குப் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என்று அவர்களிடம் தெரிவித்தேன்” – என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *