தேசத் துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய பேசிய வைகோ, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
குறித்த வழக்கானது பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று வைகோ சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரானார்.
ஆஜரான வைகோவை பிணையில் செல்ல நீதிமன்றம் வாய்ப்பளித்தபோதும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்க நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் ஆவார். பல தடவை அவருக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதில் இருந்து பின்வாங்கவில்லை.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்டப் போர் நடந்தபோது அவர் இந்திய மத்திய அரசையும், மாநில அரசையும் கடுமையாக சாடினார். இதற்காக அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
கடந்த 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் விடுதலைப்புலிகளுக்கு வைகோ ஆதரவு தெரிவிப்பதைக் கண்டித்தார். அதோடு வைகோவை ‘பொடா’ சட்டத்தில் கைது செய்தார்.
வேலூரில் உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 19 மாதங்கள் அவர் சிறையில் கழிக்க நேரிட்டது. என்றாலும் அவர் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை.
1964ஆம் ஆண்டு வைகோ அரசியலில் நுழைந்தார். தி.மு.க.வின் பிரசாரப் பீரங்கியாக திகழ்ந்த அவர் நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினராக இருந்தார். அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல தடவை பேசி உள்ளார்.
1994ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து ம.தி.மு.க. எனும் புதிய கட்சியை வைகோ ஆரம்பித்தார்.





