விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம் -தம்பிதுரை உறுதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

விவசாயிகள் பிரச்சினை குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம் என தம்பிதுரை உறுதி அளித்துள்ளார்.

தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவர்களை இன்று லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். இதனை அமைப்பதன் மூலமாகத்தான் விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயம் செய்ய முடியும். இப்போது காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை.

குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, இந்தப் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம். எங்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான்.

தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தி செய்வதற்காகத்தான் விவசாயிகள் கடனை வாங்கியுள்ளனர். பெரும் நிறுவனங்களுக்கு மானியமும், கடன் ரத்தும் செய்யும் போது ஏன் விவசாயிகளுக்கு செய்யக் கூடாது என்றுதான் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

நம் நாட்டு மக்களை காக்க வேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும். மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பாழானது. சிரமங்களுக்கிடையில் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம். எனவே, அச்சமில்லாமல் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *